×

போடி அருகே கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்


போடி: தேனி மாவட்டம், போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் பேரூராட்சியில் அம்மாபட்டி ஊராட்சி எல்லையில் 200 ஏக்கரில் மீனாட்சியம்மன் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயிக்கு கொட்டக்குடி ஆற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. மஞ்சளாறு அணை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கண்மாயில் மீன்கள் வளர்க்கப்பட்டு அதனை பிடித்து உள்ளூர் மற்றும் வெளியூருக்கு விற்பனை கொண்டு செல்லப்படுகிறது. இந்த கண்மாயில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீன்களை ஏலம் விடுவது வழக்கம். இந்நிலையில் ஏலம் எடுத்தவருக்கும், மீன்பிடிப்பவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கண்மாயில் மீன்பிடிக்க நீதிமன்றம் தடை விதித்தது.

போலீசார் கண்மாயில் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே கண்மாயில் கடந்த 6 மாதங்களாக யாரும் மீன் பிடிக்காததால் மீன்கள் சுமார் 10 கிலோ வரை வளர்ந்து காணப்படுகின்றன. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் மீனாட்சியம்மன் கண்மாயிக்கு நீர்வரத்தின்றி வறண்டு வருகிறது. சிறிதளவு உள்ள தண்ணீரில் மீன்கள் செத்து மிதக்கின்றன. மேலும் குறைந்தளவு தண்ணீரில் மிதக்கும் மீன்களை கொக்கு, காக்கை, நாரைகள் கொத்தி தின்று வருகிறது. இந்நிலையில் கண்மாயில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் விசுவாசபுரம், அம்மாபட்டி, பத்ரகாளிபுரம், டொம்புச்சேரி, காமராஜபுரம், உப்புக்கோட்டை பகுதி மக்கள் அவதியடைகின்றனர். மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த கண்மாயில் செத்து மிதக்கும் மீனகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post போடி அருகே கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Meenatsiyamman Kammai ,Ammapatti Padrashi ,Meenatsipuram Purchasi ,Bodi, Theni District ,
× RELATED போடி அருகே வேகத்தடைகளில் வண்ணம் பூசும் பணி விறுவிறு